ஆலங்குளம் அருகே வேட்டைக்கு சென்றபோது பரிதாபம்: மின்வேலியில் சிக்கி 2 நண்பர்கள் பலி - தோட்ட உரிமையாளர் கைது


ஆலங்குளம் அருகே வேட்டைக்கு சென்றபோது பரிதாபம்: மின்வேலியில் சிக்கி 2 நண்பர்கள் பலி - தோட்ட உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 28 April 2020 11:45 PM GMT (Updated: 28 April 2020 6:02 PM GMT)

ஆலங்குளம் அருகே காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்றபோது, மின்வேலியில் சிக்கி 2 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக தோட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம் ,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் செல்வகணபதி(வயது 22). வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் விஜயன் (22). இவர்கள் இருவரும் நண்பர்கள். தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் ஊரிலேயே இருந்து வந்தனர். இவர்களின் ஊருக்கு கீழ்புறம் அருணாசலபேரி கிராமத்தின் அருகே வனப்பகுதி அமைந்துள்ளது.

அங்கு காட்டுப்பன்றி, மான் போன்ற வனவிலங்குகள் உள்ளன. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இருவரும் சேர்ந்து தங்களது நண்பர்கள் சிலரை அழைத்து கொண்டு வனப்பகுதிக்கு காட்டுப்பன்றியை வேட்டையாட சென்றுள்ளனர்.

மின்வேலியில் சிக்கி சாவு

வனப்பகுதியின் முகப்பில் அமைந்துள்ள தோட்டத்தை தாண்டி வனப்பகுதிக்குள் சென்றபோது வேலியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி செல்வகணபதி, விஜயன் ஆகிய 2 பேர் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை கண்ட நண்பர்கள் கூச்சலிடவே பக்கத்து தோட்டத்துக்காரர்கள் வந்து பார்த்து ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ, சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்வேலியில் சிக்கி பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து நண்பர்கள் மற்றும் தோட்டத்தின் உரிமையாளரான அருணாசலப்பேரியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கிருஷ்ணபாண்டி (40) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

உரிமையாளர் கைது

விசாரணையில், கிருஷ்ணபாண்டி உரிய அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியை கைது செய்தனர்.

உயிரிழந்த செல்வகணபதி, விஜயன் ஆகிய இருவர் மீதும் ஆலங்குளம், ஊத்துமலை, பாப்பாக்குடி மற்றும் சாம்பவர்வடகரை ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், செல்வகணபதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி விடுதலையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story