ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடல்: சாராயம் காய்ச்சுவதற்கு உரிக்கப்படும் வேலம்பட்டை


ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடல்: சாராயம் காய்ச்சுவதற்கு உரிக்கப்படும் வேலம்பட்டை
x
தினத்தந்தி 2 May 2020 12:10 AM GMT (Updated: 2 May 2020 12:10 AM GMT)

ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சாராயம் காய்ச்சுவதற்காக மர்ம நபர்கள் வேலமரத்தில் இருந்து பட்டைகளை உரித்து வருகின்றனர். இதனால் மரங்கள் வதைபடுகின்றன.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கடந்த மாதம் 24-ந் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. தனியார் மதுபான பார்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், மதுபான பிரியர்கள் மதுகிடைக்காமல் தவித்து வருகின்றனர். கூடுதல் விலை கொடுத்தாவது கள்ளச்சந்தையில் திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்பவர்களை தேடி அலைகின்றனர்.

மதுபான பிரியர்களின் தவிப்பை புரிந்து கொண்டு பலரும் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, உப்புக்கோட்டை, வளையப்பட்டி, கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்பட பல்வேறு இடங்களிலும் திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் போலீசார் ரோந்து சென்று சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.

வேலம்பட்டை

அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்ட நாளில் இருந்து இதுவரை தேனி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சியது மற்றும் காய்ச்ச முயற்சி செய்தது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் மறைமுகமாக மலையடிவார பகுதிகள், தனியார் தோட்டத்து பகுதிகளில் தொடர்ந்து சிலர் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு சாராயம் காய்ச்சுவதற்கு வேலமரங்களில் உள்ள பட்டைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வேலமரங்களில் பட்டைகளை மர்ம நபர்கள் உரித்துள்ளனர். கண்டமனூர், மரிக்குண்டு, அம்மச்சியாபுரம் பகுதிகளில் உள்ள மலைக்கரட்டு பகுதிகளில் ஏராளமான வேலமரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு ஏராளமான மரங்களில் மர்ம நபர்கள் பட்டைகளை உரித்துள்ளனர். சில மரங்கள் பட்டுப்போகும் அளவுக்கு பட்டைகள் உரிக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற மர்ம நபர்களால் மரங்கள் தொடர்ந்து வதைபட்டு வருகின்றன.

எனவே, மலைக்கரட்டு பகுதிகளில் மரங்களில் பட்டைகளை உரிக்கும் நபர்களை கண்காணித்து பிடிப்பதற்கும், அவர்களிடம் இருந்து வேலமரங்களை பாதுகாக்கவும் வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தொடர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story