நெல்லையில் ஆதரவற்றோரை நாடாளுமன்ற விவாதம் நடத்த வைத்த கொரோனா

நெல்லையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோர் நாடாளுமன்ற மாதிரி விவாதம் நடத்தினார்கள்.
நெல்லை,
நெல்லையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோர் நாடாளுமன்ற மாதிரி விவாதம் நடத்தினார்கள்.
ஆதரவற்றோர்
கொரோனா பரவலால் பல்வேறு விசித்திர சம்பவங்கள் நடந்து வருகின்றன. நெல்லையில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கால கட்டத்தில் சாலையோரங்களில் கிடந்த ஆதரவற்றோரை மீட்டு பராமரிக்க நெல்லை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நெல்லை மாநகராட்சி, ஆர்.சோயா தொண்டு நிறுவனமும் இணைந்து நெல்லை மாநகர பகுதியில் சாலையோரங்களில் உள்ள அனைத்து ஆதரவற்றோரையும் மீட்டு பாதுகாப்பாக டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் தங்க வைத்து உணவு உள்பட அடிப்படை வசகிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
இவர்களை மனம் மாற்றி சக மனிதர்கள் போல் காலையில் பல் தேய்த்து குளிப்பது முதல் இரவில் கைகால்களை கழுவி மின்விசிறியின் கீழ் பாய் விரித்து படுப்பது வரை தொடர்ந்து உளவியல் ரீதியான பயிற்சிகளை கொடுத்து, புகைப்பழக்கம், போதை பழக்கங்களை விட்டு விட்டு கண்ணியத்துடன் அமைதியாக வாழ்கின்றனர்.
நாடாளுமன்ற மாதிரி விவாதம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அவர்களுக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்‘ சினிமா திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை உழைத்து உயர்ந்தவர்கள் மற்றும் எதிர் வாழ்க்கை அமைக்க திட்டம் என்ற கருத்தரங்கை ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் முகாம் மக்களிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சிக்கு சோயா சரவணன் தலைமை தாங்கினார். மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
மாலையில் தங்களது தனித்திறமைகளையும், தங்களது வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ளும் ‘உணர்வின் குரல்‘ என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றம் போல் இருக்கைகள் அமைத்து அதில் அவர்களை அமர வைத்து விவாதம் மற்றும் அவர்களது மனக்குமுறல்களை பேச வைத்தனர்.
அப்போது அவர்கள் தங்களது வாழ்வின் துன்பம் மற்றும் வேடிக்கை சம்பவங்களை வித்தியாசமாக வெளிப்படுத்தினர். அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டும் பேசினார்கள்.
உளவியல் பயிற்சி
இதுகுறித்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சோயா சரவணன் கூறியதாவது:-
சாதாரண மனிதனின் வாழ்க்கை முறை போல் இவர்களின் வாழ்க்கை முறை கிடையாது. இவர்கள் நாளை என்ற வார்த்தையை நினைத்து ஏங்குவது இல்லை. இன்று இப்போது என்ன கிடைத்தது, எப்படி எல்லாம் ஜாலியாக இருக்கலாம் என்ற சிந்தனை மட்டுமே இருக்கும்.
தெருக்களில் ஜாலியாக சுதந்திரமாக சுற்றி திரிந்து நினைத்த நேரம் கிடைத்த பொருளை சாப்பிட்டு, போதை பொருட்களை உபயோகித்தும், சுத்தம் என்ற வார்த்தையை தெரியாமல் உழைப்பின் சுகம் தெரியாமல் நாம் வாழும் ஊரில் நம்மோடு வாழ்ந்து வந்தனர். அவர்களை பிச்சைக்காரர்கள் என்று ஒதுக்கி அவர்களை திருத்தவே முடியாது என கைவிடப்பட்டனர். இந்த நிலையில் தான் கொரோனாவால் அவர்கள் மீட்கப்பட்டு நல்வழிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. உளவியல் ரீதியாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறிளார்.
Related Tags :
Next Story