கட்டுமான நிறுவனம் கைவிரிப்பு: வடமாநில தொழிலாளர்கள் பரிதவிப்பு - சென்டிரல் அருகே நடைபாதையில் தஞ்சம்

கட்டுமான நிறுவனம் கைவிட்டதால் வடமாநில தொழிலாளர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னை,
சென்னையில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளுக்கு ‘கொரோனா’ முட்டுக்கட்டை போட்டது. இதனால் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அடைகலம் கொடுத்து உணவு வழங்கி வருகின்றன.
பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் கைவிரிவித்து விட்டன. இதனால் சென்னையில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் வடமாநில தொழிலாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தற்போது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அடைகலம் கொடுத்த கட்டுமான நிறுவனங்களும் தொழிலாளர்களை வெளியேற்றி வருகின்றன.
இந்தநிலையில், ‘எங்கு செல்வது என்று தெரியாமல் பீகார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் சென்டிரல் அருகே உள்ள நடைபாதையில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதில் பெண் தொழிலாளர்களும் அடங்குவர்.
இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் மனவேதனையுடன் கூறியதாவது:-
சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் நாங்கள் ஈடுபட்டு இருந்தோம். தினமும் ரூ.500 கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தோம். கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் முடங்கியதால் நாங்கள் வேலை இழந்தோம். எனினும் நாங்கள் வேலை செய்த இடத்திலேயே தங்கி இருந்தோம்.
இந்தநிலையில் எங்களிடம் ‘சென்டிரலில் இருந்து ரெயில்கள் இயங்குகிறது. உங்களுடைய ஊருக்கு நீங்கள் புறப்பட்டு செல்லுங்கள்’ என்று கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர். சொந்த ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் நாங்கள் காட்டுப்பாக்கத்தில் இருந்து நடந்தே கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தோம். அப்போது, ரெயில்கள் இயங்கவில்லை என்று போலீசார் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அதன்பின்னர் தான், எங்களை கட்டுமான நிறுவனத்தினர் ஏமாற்றி வெளியேற்றி இருப்பதை உணர்ந்தோம்.
கையில் பணமும் இல்லை, உடலில் தெம்பும் இல்லை. எனவே எங்கு செல்வது என்று தெரியாமல் நடைபாதையிலேயே தங்கி உள்ளோம். அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிட்டு பசியை போக்கிக்கொள்கிறோம். பெண்களை வைத்துக் கொண்டு நடைபாதையில் இரவு தங்குவது தான் மிகுந்த கவலை அளிக்கிறது. உழைத்து சாப்பிட்ட நாங்கள் இன்றைக்கு பிச்சைக்காரர்கள் போன்று நடுவீதிக்கு வந்து விட்டோம். எங்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story