புதிதாக தேர்வான பெண் போலீசாருக்கு 15 நாட்கள் பயிற்சி தஞ்சையில் டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்தார்


புதிதாக தேர்வான பெண் போலீசாருக்கு 15 நாட்கள் பயிற்சி தஞ்சையில் டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 May 2020 5:46 AM IST (Updated: 5 May 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண் போலீசாருக்கு முதல் கட்டமாக 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண் போலீசாருக்கு முதல் கட்டமாக 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை தஞ்சையில் டி.ஐ.ஜி. லோகநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

பெண் போலீசுக்கு பயிற்சி

பெண் போலீசாருக்கான ஆட்கள் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி நேற்று தொடங்கியது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 45 பேர் விழுப்புரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இவர்களுக்கு முதல் கட்டமாக 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி முதல் கட்ட பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்பட்டு, பின்னர் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.

தஞ்சையில் தொடங்கியது

அதன்படி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் வரவேற்றார்.

பயிற்சி முகாமை தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்து தேர்வான பெண் போலீசாருக்கு சானிடைசர், கையுறை ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு தேர்வாகி வந்துள்ளவர்கள் பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படித்துள்ளர்கள். உங்களுடைய பின்புலம் எப்படி இருந்தாலும் நீங்கள் அனைவரும் இனி போலீசார் தான். தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்படுகிறது. டாக்டர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அதே போல் உங்களுக்கு முதல் கட்டமாக 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பொறுப்புடன் செயல்பட வேண்டும்

இருப்பினும் உங்களுடைய பாதுகாப்பு முக்கியம். எனவே நீங்கள் கட்டாயம் முக கவசம், கையுறை அணிய வேண்டும். 2 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். சோதனை சாவடி, சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிகளில் இருக்கும் போது கட்டாயம் முக கவசம், கையுறை அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவு வேண்டும். சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா நன்றி கூறினார்.

Next Story