பெண்களை சீரழித்ததாக புகார்: குமரி காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


பெண்களை சீரழித்ததாக புகார்: குமரி காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x

பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

நாகர்கோவில், 

பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

பெண் டாக்டர் புகார்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் நெருங்கி பழகினார். அவரை தன்னுடைய வலையில் வீழ்த்தியதோடு, அவருடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

காசியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பெண் டாக்டர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். பின்னர் போலீசார் காசி மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பெண் டாக்டரை ஏமாற்றியது போல் பல பெண்களிடம் காசி பணம் பறித்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதற்கிடையே காசியின் செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், பல பெண்களிடம் அவர் நெருக்கமாக இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே, நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயரும், காசி மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில், தன்னிடம் நெருங்கி பழகியதோடு நகை, பணம் பறித்தார். மேலும், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காசி மீது கந்து வட்டி புகார் ஒன்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து காசி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் வந்ததால், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து நாங்குநேரி சிறையில் இருந்த காசியை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

மனு தாக்கல்

காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? காசியின் கூட்டாளிகள் யார்? என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. எனவே காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து காசியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மகிளா குற்றவியல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்தார்.

3 நாட்கள் போலீஸ் காவல்

இதற்காக காசி பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அழைத்து வரப்பட்டார். இந்த மனு மீதான விசாரணையில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜராகி வாதாடினார். அதே சமயம் காசி தரப்பில் வக்கீல் மகேஷ் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனை

இதை தொடர்ந்து காசியின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் காவலில் விசாரிக்க காசி அழைத்து செல்லப்பட்டார். போலீஸ் காவலில் காசியை விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியே வரலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story