பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க சமூக இடைவெளியை மீறி குவிந்த பொதுமக்கள்
பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க சமூக இடைவெளியை மீறி பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை,
பெருந்துறை தினசரி மார்க்கெட், தற்போது பெருந்துறை பஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் இருக்க, இந்த மார்க்கெட்டில் சமூக இடைவெளியானது, போலீஸ் கண்காணிப்புடன் ஆரம்பத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெருந்துறை தினசரி மார்க்கெட் வியாபாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பெருந்துறை நகர பொதுமக்களுக்கு, இலவசமாக காய்கறிகளை நேற்று வழங்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து காளான் விற்பனையாளர் எம்.பழனிச்சாமி தலைமையில், வியாபாரிகள் ஒவ்வொருவரும் காய்கறிகளை காலை மார்க்கெட் நுழைவு வாயில் அருகே மலைபோல் குவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்களில், குறிப்பாக பெண்கள் அதிகாலை 5 மணி முதலே, தினசரி மார்க்கெட் முன்பு நூற்றுக்கணக்கில் குவிந்தனர். கொரோனா தொற்று பரவிவிடும் என்கிற பயம் ஏதுமின்றி, கோவை மெயின் ரோட்டில் பெண்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது அங்கு வந்த பெண் போலீசார், அவர்களை சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்குமாறு கூறினர். ஆனால் யாரும் கேட்கவில்லை.
கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து, பச்சை மண்டலத்திற்கு மாறி ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் கொரோனா குறித்த விழிப்புணர்வு அறவே இல்லாமல் பெண்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், இலவச காய்கறிகளுக்காக இடித்துக்கொண்டு நின்றதைப்பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர்.
Related Tags :
Next Story