60 வழக்குகளில் தொடர்புடையவர் உள்பட தஞ்சையில் கைவரிசை காட்டிய பிரபல திருடர்கள் 4 பேர் கைது

தஞ்சையில் கைவரிசை காட்டிய பிரபல திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 60 வழக்குகளில் தொடர்புடையவரும் அடங்குவார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் கைவரிசை காட்டிய பிரபல திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 60 வழக்குகளில் தொடர்புடையவரும் அடங்குவார். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
வாகன திருட்டு
தஞ்சை நகரம் மற்றும் வல்லம் உட்கோட்ட பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போன வண்ணம் இருந்தன. இதே போல் உழவர் சந்தை, கடை வீதி, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற இடங்களில் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போனது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதா ராமன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், ஏட்டுகள் ரமேஷ்குமார், உமாசங்கர், இளவரசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன திருடர்களை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தஞ்சை, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வாகன திருட்டில் ஈடுபட்ட பனங்காட்டை சேர்ந்த குமரவேல் (வயது32), தஞ்சை இ.பி.காலனியை சேர்ந்த வீரமணி (34), மானோஜிப்பட்டியை சேர்ந்த முத்துராமலிங்கம் (23), பூக்கார விளார் சாலை நாராயணன் காலனியை சேர்ந்த பிராகஷ் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 புல்லட் உள்பட 11 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இன்னொருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
60 வழக்குகளில் தொடர்பு
கைது செய்யப்பட்ட குமரவேல் மீது வாகன திருட்டு, செயின்பறிப்பு உள்பட 60 வழக்குகளும், வீரமணி மீது செயின்பறிப்பு உள்பட 5 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story