பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 50.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,755 கோடி நிதி உதவி - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 50.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,755 கோடி நிதி உதவி - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 8 May 2020 12:30 AM GMT (Updated: 8 May 2020 12:30 AM GMT)

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 50.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,755 கோடி நிதி உதவி வழங்கியுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

“கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் விவசாய பணிகள் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டுவந்து விற்க எந்த தடையும் விதிக்கவில்லை. விவசாயத்துறை அலுவலகங்கள், விவசாயிகள் தொடர்பு மையங்கள், வாடகை அடிப்படையில் விவசாய உபகரண சேவை மையங்கள், விவசாய பொருட்கள் விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

அறுவடை பணிகள்

பருவமழைக்கு முந்தைய பயிர் விளைச்சல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 80 சதவீத அறுவடை முடிவடைந்து உள்ளது. பிற மாநிலங்களில் இருந்தும் அறுவடை எந்திரங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க விவசாய போர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் புதிதாக பயிரிடுதல், விதைப்பு பணிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. கர்நாடகத்தில் சாகுபடி செய்யப்படும் தக்காளி, பழங்கள், பூக்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலங்கட்டி மழை

ஹாப்காம்ஸ் கடைகள் மூலம் தக்காளி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ராய்ச்சூர், கொப்பல், பல்லாரி மாவட்டங்களில் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 50.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,755 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் நடப்பு ஆண்டில் (2020-21) மட்டும் ரூ.47.81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.956 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 44.67 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.893 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காசோளத்தை கொள்முதல் செய்யும்படி கர்நாடக பால் கூட்டமைப்புக்கு உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தோட்டக்கலைத்துறை மந்திரி நாராயணகவுடா, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story