தஞ்சாவூரில் இருந்து வந்த வியாபாரிக்கு கொரோனா: தனிமைப்படுத்தலை அலட்சியப்படுத்தி சகஜமாக நடமாடியதால் பரபரப்பு


தஞ்சாவூரில் இருந்து வந்த வியாபாரிக்கு கொரோனா: தனிமைப்படுத்தலை அலட்சியப்படுத்தி சகஜமாக நடமாடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2020 2:19 AM GMT (Updated: 9 May 2020 2:19 AM GMT)

தஞ்சாவூரில் இருந்து மார்த்தாண்டம் விரிகோட்டுக்கு வந்த வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழித்துறை, 

தஞ்சாவூரில் இருந்து மார்த்தாண்டம் விரிகோட்டுக்கு வந்த வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலை அலட்சியப்படுத்தி சகஜமாக நடமாடியதால் மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

வியாபாரி

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த 72 வயதுடைய வியாபாரியும் ஒருவர். இவர் மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் இரும்பு கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவர் வீட்டில் ஓய்வில் இருந்தார்.

இவருடைய மகள் தஞ்சாவூரில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்த வியாபாரி மகளை பார்ப்பதற்காக தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு மகள் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு பின்னர் காரில் வீடு திரும்பினார்.

சளி பரிசோதனை

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் வந்த போது, அங்கு பணியில் இருந்த சுகாதார பணியாளர்கள் வியாபாரியிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்து விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.

வீட்டுக்கு வந்த வியாபாரி தனிமைப்படுத்தல் அறிவுரையை சரியாக கடைபிடிக்காமல் சகஜமாக நடமாடினார் எனத்தெரிகிறது. மேலும் அந்த வியாபாரி, தஞ்சாவூரில் தங்கியிருந்த போது, விரிகோட்டில் உறவினர் ஒருவர் மரணம் அடைந்தார். வியாபாரி சொந்த ஊருக்கு வந்தவுடன் உறவினரது வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றுள்ளார். அத்துடன், தோட்டத்திற்கு செல்லுதல், கடைகளுக்கு செல்லுதல் உள்ளிட்ட வழக்கமான பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், ஆரல்வாய்மொழியில் சேகரிக்கப்பட்ட சளிமாதிரியின் பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வெளியானது. அதில் வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே, சுகாதார பணியாளர்கள் வியாபாரியின் வீட்டுக்கு சென்று அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

வீட்டுக்கு சீல் வைப்பு

உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதாவன், விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று விரிகோடு பகுதிக்கு சென்று வியாபாரியின் வீட்டில் உள்ள அனைவரையும் தனிமை படுத்தி வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனர். அத்துடன் வியாபாரியின் மனைவி, குடும்பத்தினர், அவர் துக்க விசாரிக்க சென்ற உறவினர்கள் ஆகியோரிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சுகாதார பணியாளர்கள் விரிகோடு பகுதியில் முகாமிட்டு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் போடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

மகளுக்கு கொரோனா

தஞ்சாவூரில் தங்கியுள்ள வியாபாரியின் மகளுக்கு கொரோனா தொற்று உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்துதான் வியாபாரிக்கு தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என தெரிகி றது. தொற்று ஏற்பட்ட வியாபாரி சுகாதாரதுறையினரின் அறிவுரைபடி தனிமை படுத்தாமல் சகஜமாக நடமாடியதால் மேலும் பலருக்கு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே, அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

செறுதிக்கோணம்

குலசேகரம் அருகே செறுதிக்கோணத்தை சேர்ந்த ஒரு நர்சு சென்னைக்கு சென்ற போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து செறுதிக்கோணம் பகுதிக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள பலரது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் யாருக்கும் கொ ரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதையடுத்து தற்போது செறுதிக்கோணம் பகுதியில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், 203 குடும்பங்களை மட்டும் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story