ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: மதுக்கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு


ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: மதுக்கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 10 May 2020 7:46 AM IST (Updated: 10 May 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக திருச்சியில் மதுக்கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

திருச்சி, 

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக திருச்சியில் மதுக்கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

2 நாட்கள் இயங்கிய மதுக்கடை

கொரோனா மிரட்டலுக்கு இடையே தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டன. திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 20 மதுக்கடைகளை தவிர, 163 கடைகள் திறக்கப்பட்டன.

முதல் நாள் மதுக்கடைகள் முன்பு கட்டுக்கடங்காத மதுப்பிரியர்களின் கூட்டம் இருந்தது. இதனால் டோக்கன் மூலம், சமூக விலகலுடன் சென்று மதுபாட்டில்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் முதல்நாளில் ரூ.7½ கோடிக்கு மது விற்பனை ஆனது. 2-வது நாளான நேற்று முன்தினம் பெரிய அளவில் மதுவிற்பனை நடைபெறவில்லை.

சீல் வைப்பு

இந்தநிலையில் மதுக்கடைகளில் ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனைகள் மீறப்பட்டதாக கூறி, ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க தடை விதித்ததுடன், ஆன்லைன் மூலம் மதுப்பாட்டில்களை விற்பனை செய்யலாம் என ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியது. அதைத்தொடர்ந்து தமிழக அரசும் மதுக்கடைகளை பூட்டி சீல் வைக்க மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. திருச்சி மாநகரில் செயல்பட்ட 71 கடைகள், புறநகரில் உள்ள இதர கடைகள் அனைத்தும் டாஸ்மாக் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மேலும் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story