திருச்சியில் போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்: சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லைப்போட்டு கொலை

திருச்சியில் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யயப்பட்டார்.
திருச்சி,
திருச்சியில் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யயப்பட்டார். இது தொடர்பாக பனியன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி கொலை
அரியலூர் மாவட்டம் கொட்டக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கடந்த 15 ஆண்டுகளாக திருச்சி கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பழைய பேப்பர், பாட்டில்களை பொறுக்கி விற்று வந்த இவர், இரவுநேரங்களில் கோட்டை போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் உள்ள கடைகளின் முன்பு படுத்து தூங்குவது வழக்கம்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிழக்கு வடக்கு வீதியை சேர்ந்தவர் காஜாமைதீன் (38). இவர் 10 வருடங்களுக்கும் மேலாக திருச்சி பெரியகடைவீதி அருகே உள்ள ஒரு மைதானத்தில் தங்கி இருந்து அங்கு சாலையோரம் பனியன், ஜட்டி விற்பனை செய்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் செல்வராஜ் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த காஜாமைதீன் கல்லை தூக்கி செல்வராஜ் தலையில் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
பனியன் வியாபாரி கைது
தகவல் அறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக பனியன் வியாபாரி காஜாமைதீனை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும், காஜாமைதீன் இரவுநேரத்தில் தூங்காமல் சுற்றி கொண்டே ‘சைக்கோ‘ போல் நடந்து கொண்டதும், அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து அவர்களது கையை கடித்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, கொலை நடந்த சமயத்தில் காஜாமைதீன் அந்த வழியாக நடந்து சென்றதும், கல்லை தூக்கி போட்டதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து, காஜாமைதீனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story