மும்பையில் இருந்து குடும்பத்துடன் ஆட்டோ, டாக்சிகளில் சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்கும் டிரைவா்கள்


மும்பையில் இருந்து குடும்பத்துடன் ஆட்டோ, டாக்சிகளில் சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்கும் டிரைவா்கள்
x
தினத்தந்தி 12 May 2020 4:46 AM IST (Updated: 12 May 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இருந்து ஆயிரக்கணக்கான ஆட்டோ, டாக்சிகளில் வெளிமாநில டிரைவர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

மும்பை, 

மும்பையில் ஆயிரக்கணக்கான டாக்சிகளும், லட்சக்கணக்கான ஆட்டோக்களும் இயங்கி வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பையில் இருந்து ஆயிரக்கணக்கான டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு தங்கள் வாகனத்தில் செல்ல தொடங்கி உள்ளனர். மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற ஒருவர் பல தொழிலாளர்கள் ஆட்டோ, டாக்சிகளுடன் வடஇந்தியா நோக்கி பயணம் செய்ததை பார்த்ததாக கூறினார்.

ஒரு மணி நேரத்துக்கு 50 ஆட்டோக்கள் இந்தூர் பைபாஸ் ரோட்டில் செல்வதாக அங்குள்ள கேண்டினில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து மும்பை டாக்சி டிரைவர்கள் சங்க தலைவர் ஏ.எல். குவாட்ரோஸ் கூறுகையில், ‘‘மும்பையில் சுமார் 45 ஆயிரம் டாக்சிகளும், 5 லட்சம் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 1,000 டாக்சிகள், 5 ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். 2 மாதமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டிரைவர்கள் கையில் பணம் இல்லாமல் தவித்தனர். பட்டினியால் சாகும்நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்துவிட்டனர்.

பலர் 20 அல்லது 30 பேராக சேர்ந்து வாகன வசதி ஏற்பாடு செய்து உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு சென்று உள்ளனர். மேலும் பலர் சொந்த வாகனங்களிலேயே புறப்பட்டு விட்டனர்’’ என்றார்.

மும்பை ஆட்டோ டிரைவர்கள் சங்க தலைவர் சசாங் ராவ் கூறுகையில், “பஸ், லாரி டிரைவா்கள் அதிகம் பணம் கேட்பதால் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் சொந்த வாகனத்திலேயே சொந்த ஊருக்கு செல்கின்றனர். சிலர் உடைமைகளை எடுத்து கொண்டு குடும்பத்தினருடன், பலர் நண்பர்களுடன் சென்று உள்ளனர்” என்றார். இந்தநிலையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆன்லைன் மூலம் தற்காலிக பெர்மிட்களை பெற்றுக்கொண்டு சொந்த ஊர் செல்லலாம் என வட்டார போக்குவரத்து கழக அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் அவர்கள் சொந்த ஊர் செல்ல இதுபோன்ற பாஸ்கள் தேவையில்லை என அரசு உத்தரவிட வேண்டும் என டிரைவர்கள் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story