சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 13 May 2020 10:41 AM IST (Updated: 13 May 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

கீரனூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கீரனூர், 

கீரனூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

இலுப்பூர் அருகே வீரடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 24). இவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியானார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தை திருமணம் செய்து கொண்டதற்காக முரளிதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவிற்ற 5 பேர் கைது

*விராலிமலை போலீசார் தேராவூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழ தேராவூர் கிராமத்தில் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 53) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*காரையூர் அருகே வீட்டில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்ற கூடலூரை சேர்ந்த கஜேந்திரன் (47) என்பவரை காரையூர் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

*கீரனூர் அருகே ஆலவயல் கிராமத்தில் சின்னராஜா என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்று கொண்டிருந்த சின்னராஜா (31), பாலகிருஷ்ணன் (40), செல்வம் (31) ஆகிய 3 பேரை உடையாளிப்பட்டி போலீசார் கைது செய்து, 136 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பால்ராஜ், கந்தசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முதியவர் பலி

*காரையூர் அருகே உள்ள நெருஞ்சிகுடியை சேர்ந்தவர் கருத்தான் (70). இவர் நெய்வேலி விளக்கு ரோட்டின் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அன்பரசன் (37) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கருத்தான் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருத்தான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராய ஊறல் அழிப்பு; ஒருவர் கைது

*அன்னவாசல் அருகேயுள்ள பெருஞ்சுனை மாணிக்கம்பட்டியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டு இருப்பதாக புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த சண்முகம் (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 3 சாராய ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதையடுத்து போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.

நிவாரணம் வழங்கிய போலீசார்

*இலுப்பூர் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குழந்தைகளுக்கு உணவின்றி சிரமப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமான், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

3 கடைகளுக்கு சீல்

*கந்தர்வகோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறியும், சமூக விலகலை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்த கறம்பக்குடி சாலையில் உள்ள பிளைவுட் கடை, ஹார்டுவேர், டீக்கடை ஆகிய 3 கடைக்களுக்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் சதீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், கிராம நிர்வாக அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Next Story