மலிவு விலையில் காய்கறி வழங்க கிராம மக்கள் அமைக்கும் தோட்டம்

மக்களுக்கு மலிவு விலையில் காய்கறி வழங்க கிராம மக்கள் இணைந்து காய்கறி தோட்டம் அமைத்து வருகின்றனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது பெரிய கொட்டக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக இந்த கிராம மக்களுக்கு பெரியகொட்டக்குடி ஊராட்சி மன்றம் சார்பில் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து எப்போதும் அந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் வழங்க அந்த ஊராட்சி மக்களும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து புதுமையான முயற்சியாக காய்கறி தோட்டம் அமைத்து வருகிறார்கள்.
இதற்காக புதர் மண்டிக்கிடந்த சுமார் 2 ஏக்கர் தரிசு நிலத்தை சீரமைத்து அங்கு காய்கறி தோட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது, அந்த நிலத்துக்குள் கால்நடைகள் செல்லாத வகையில் சுற்றி வேலி அமைக்கப்பட்டு, காய்கறி பயிர் நடவு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிழல் தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதுகுறித்து பெரியகொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தனபால் கூறியதாவது:-
எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட 8 கிராம மக்களும் ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு ஊராட்சி சார்பில் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் தினந்தோறும் ஊராட்சிக்கு அதிக செலவு நேரிட்டது. இதையடுத்து இப்பகுதி கிராம மக்கள் உதவியோடு, சுமார் 2 ஏக்கர் அளவு உள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை சீரமைத்து, ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிர் செய்கிறோம். இங்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பாதி விலைக்கு மக்களிடம் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இதனால் ஊராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கிராம மக்களுக்கு மலிவு விலையிலும் காய்கறிகள் கிடைக்கும். தற்போது இந்த காய்கறி தோட்டத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, பூசணி, பாகற்காய், புடலங்காய், ஆகிய காய்கறிகளும், கடலை செடி மற்றும் சப்போட்டா, மா, பலா உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகளையும் நடும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக தினந்தோறும் இக்கிராம மக்களும், 100 நாட்கள் வேலை திட்ட தொழிலாளர்களையும் பயன்படுத்தி வருகிறோம்.
இன்னும் 30 முதல் 40 நாட்களுக்கு காய்கறிகள் காய்க்க தொடங்கி விடும். அதன்பின்னர் இங்கிருந்து கிடைக்கும் காய்கறிகளை இக்கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களாக வினியோகம் செய்ய உள்ளோம். மேலும் இந்த ஊரடங்கு முடிந்த பின்னர் இந்த காய்கறி தோட்டத்தை இன்னும் விரிவுப்படுத்தி பல்வேறு செடிகள், மரங்கள் நடவு செய்ய உள்ளோம். எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இங்கு வந்து இதை நேரடியாக ஆய்வு செய்து எங்களுக்கு தேவையான மானிய உதவியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story