தேனி அருகே பரபரப்பு: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதுபானம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தேனி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தில் நாகலாபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த கடை கடந்த 8-ந்தேதி மாலையில் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் இந்த டாஸ்மாக் கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கருப்பையா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
அப்போது கடையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் மற்றும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து, கதவு, கடைக்குள் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் கடை மேற்பார்வையாளர் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு நடந்த டாஸ்மாக் கடை கடந்த 7-ந்தேதி திறக்கப்பட்டபோது கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தால் மதுபான விற்பனை பாதியில் நிறுத்தப்பட்டது. 8-ந்தேதியும் கூட்டம் அலைமோதியதால் டோக்கன் வினியோகம், மதுவிற்பனை போன்ற பணிகளில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று ஒரே நாளில் ரூ.15 லட்சத்துக்கு இந்த கடையில் மதுவிற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story