மராட்டியத்தில் தவித்த 30 தொழிலாளிகள் மீட்பு தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்


மராட்டியத்தில் தவித்த 30 தொழிலாளிகள் மீட்பு தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 14 May 2020 12:02 PM IST (Updated: 14 May 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரை சேர்ந்த 30 தொழிலாளிகள் மராட்டிய மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டு தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூரை சேர்ந்த 30 தொழிலாளிகள் மராட்டிய மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டு தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அனுமதி சீட்டு

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டராக இருந்துவருபவர் ராம்குமார். பஸ் அதிபரான இவரிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பெரம்பலூர் நகருக்கு தொழில் நிமித்தமாக குடிபெயர்ந்த வணிகர்கள், தொழிலாளர்கள் 40 பேர், தாங்கள் கொரோனா ஊரடங்கின் காரணமாக தங்களது சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்றும், அதற்கு பஸ்களை ஏற்பாடு செய்யுமாறும் கூறினர். அவர்கள் தலைமை செயலகத்தில் இருந்து இணையதளம் வாயிலாக அனுமதி சீட்டு பெற்றிருந்தனர்.

அதன்பேரில் 40 பேரும் சமூக இடைவெளியுடன் 2 பஸ்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை ராம்குமார் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

30 தொழிலாளர்கள்

இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்த 30 தொழிலாளர்கள் மராட்டிய மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிவதாகவும், கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலையும், கையில் பணமும் இன்றி, அன்றாடம் உணவிற்கே சிரமப்படுவதாகவும், தங்களை மீட்டு செல்ல உதவி புரியுமாறு வீடியோவில் பேசி அதனை ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இதேபோல் குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் பெரம்பலூரை அடுத்த எசனை, துறையூர், தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த லாரி டிரைவர்கள் 10 பேர் ஊரடங்கின் காரணமாக வேலையும் இன்றி, உணவுக்கும் வழியின்றி இருப்பதாக கூறி ராம்குமாருக்கு வாட்ஸ்-அப் வழியாக தகவல் தெரிவித்திருந்தனர்.

இதனை உறுதி செய்த ராம்குமார், மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டம் மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்ட கலெக்டர்களுக்கு தன்னிடம் மராட்டியத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அகமதாபாத்தில் இருந்த லாரி டிரைவர்கள் தந்த ஆவணங்களை கொண்டு உரிய ஆதாரத்துடன் இணைய தளம் வாயிலாக உடனடியாக விண்ணப்பம் செய்து 2 பஸ்களுக்கும் அனுமதி சீட்டு பெறவும், அவர்களை சமூக இடைவெளியுடன் அழைத்து செல்ல உரிய அனுமதி பெறவும் உதவி புரிந்தார்.

தனிமைப்படுத்தும் முகாமில்...

இதனை தொடர்ந்து பெரம்பலூரில் வசித்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களை தலா 2 டிரைவர்கள் மற்றும் தலா ஒரு உதவியாளருடன் கடந்த 7-ந் தேதி 2 பஸ்களில் பெரம்பலூரில் இருந்து ராஜஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு ராஜஸ்தான் மாநில வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களை விட்டுவிட்டு, அங்கிருந்து திரும்பும் வழியில் அகமதாபாத்தில் சிக்கி தவித்த லாரி டிரைவர்கள் 10 பேரை ஒரு பஸ்சில் அழைத்துவந்து கிருஷ்ணகிரியில் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்திக்கொள்ள போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு அந்த பஸ் பெரம்பலூர் திரும்பியது. மற்றொரு பஸ்சில் மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தில் தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர்கள் 30 பேரை சமூக இடைவெளியுடன் உட்கார வைத்து அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பெரம்பலூர் வந்தடைந்தனர். மராட்டிய மாநிலத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 30 தொழிலாளர்களும், மாவட்ட கலெக்டர் சாந்தா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் ஆகியோரின் அறிவுரையின்பேரில் திருமாந்துறையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் சேர்க்கப்பட்டனர். மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டர் செய்த இந்த உதவிக்கு 30 தொழிலாளர்களும், 10 டிரைவர்களும் நன்றி தெரிவித்தனர்.

Next Story