கத்தியால் கழுத்தை அறுத்து அச்சக அதிபர் தற்கொலை- ஊரடங்கால் தொழிலை நடத்த முடியாததால் பரிதாபம்


கத்தியால் கழுத்தை அறுத்து அச்சக அதிபர் தற்கொலை- ஊரடங்கால் தொழிலை நடத்த முடியாததால் பரிதாபம்
x
தினத்தந்தி 15 May 2020 12:00 PM IST (Updated: 15 May 2020 1:11 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் தொழிலை நடத்த முடியாததால் கத்தியால் கழுத்தை அறுத்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை, 

மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு யோகனந்தா சுவாமி மடம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 55), ம.தி.மு.க.வில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகன் ராஜேஸ்குமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்தநிலையில் இளங்கோவன், விஜயலட்சுமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இளங்கோவன் பொன்மேனி பகுதியில் அச்சக நிறுவனம் நடத்தி வந்தார். இதற்கிடையே தொழிலை விரிவுபடுத்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில் கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொழில் முடங்கியதால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இரவில் வெகுநேரமாகியும் இளங்கோவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தேட தொடங்கினர்.

இளங்கோவனின் அண்ணன் அச்சக அலுவலகத்திற்கு சென்று பார்த்தார். அங்கு ரத்தவெள்ளத்தில் இளங்கோவன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் அவரது அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதன் மூலம் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

அதில் “தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதி வைத்திருந்தார். ஆனால் விஷம் குடித்து அவரது உயிர் போகவில்லை. இதனால் அவர், கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவங்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தவிர கடிதத்தில் அவர் பல்வேறு தகவல்களை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர் அச்சகம் நடத்தி வரும் இடத்தை விற்று கடனை அடைக்க முயன்றதாகவும், இது குறித்து முயன்ற போது அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மேலும் அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவிலுக்கு சாதமாக முடிந்ததால் இடத்தை விற்று கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story