பொள்ளாச்சி அருகே மது கிடைக்காததால் எரிசாராயம் குடித்த 2 பேர் சாவு தனியார் தொழிற்சாலைக்கு ‘சீல்’

பொள்ளாச்சி அருகே மது கிடைக்காததால் எரிசாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே மது கிடைக்காததால் எரிசாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடுமையான வயிற்று வலி
பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தில் வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த உத்தரராஜ் (வயது 34), குரும்பபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (30) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் 2 பேரும் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் தொழிற்சாலையில் உதிரிபாகங்களுக்கு பூசுவதற்கு ரசாயன கலவை இருந்தது. அந்த ரசாயன கலவையானது 20 சதவீதம் ஆல்கஹாலும், 80 சதவீதம் ரசாயனமும் கலந்ததாகும். இதை அறியாமல் ஆல்கஹால் இருப்பதால் குடித்தால் போதை ஏறும் என்று நினைத்து உத்தரராஜ், சுரேஷ் ஆகியோர் அந்த ரசாயன கலவையை எடுத்து குடித்தனர். அதன்பிறகு கடுமையான வயிற்று வலியால் துடித்தனர்.
தொழிற்சாலைக்கு ‘சீல்’
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் உத்தரராஜ், சுரேஷ் ஆகியோர் குடித்த ரசாயன கலவையை போலீசார் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அப்போது அது எரிசாராயம் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் பொள்ளாச்சி தாசில்தார் தணிகவேல், கோட்ட கலால் அலுவலர் ஜெயந்தி ஆகியோர் அந்த நிறுவனத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அந்த ரசாயன கலவையை பயன்படுத்த உரிமம் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் மாரீஸ்வரன், கலால் துறை வருவாய் ஆய்வாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் பட்டுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story