கொரோனா தடுப்பு கேள்விக்குறியாகும் பரிதாபம்: கிருமிநாசினி மருந்து இல்லாத ஏ.டி.எம். மையங்கள்


கொரோனா தடுப்பு கேள்விக்குறியாகும் பரிதாபம்: கிருமிநாசினி மருந்து இல்லாத ஏ.டி.எம். மையங்கள்
x
தினத்தந்தி 16 May 2020 10:42 AM IST (Updated: 16 May 2020 10:42 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம்.மையங்களில் கிருமிநாசினி மருந்து இல்லாததால் கொரோனா தடுப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம்.மையங்களில் கிருமிநாசினி மருந்து இல்லாததால் கொரோனா தடுப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

கிருமிநாசினி மருந்து

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என்று தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரம் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. எனவே, கொரோனா சமூக தொற்றாக மாறாமல் இருப்பதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் கைகழுவுவதற்கு சோப்பு அல்லது கிருமிநாசினி மருந்து வைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பொதுமக்கள் கைகழுவுவதற்கு கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டது. அதேபோல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி மருந்து வழங்கப்படுகிறது. இதுதவிர ஒருசில ஏ.டி.எம். மையங்களிலும் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கிறது. இதை பணம் எடுக்க வரும் அனைவரும் இருமுறை பயன்படுத்துகின்றனர்.

ஏ.டி.எம். மையங்கள்

ஆனால், மாவட்டம் முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி மருந்து வைக்கப்படவில்லை. இதனால் அங்கு பணம் எடுக்க வருபவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் அதுபோன்ற ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. ஏ.டி.எம். மையங்களில் ஏ.சி. வசதி உள்ளதோடு, அறை மிகவும் சிறியதாக இருக்கும். மேலும் பணம் எடுக்க செல்பவர்கள் மையத்தின் கதவு, எந்திரத்தின் பொத்தான்களை தொட வேண்டியது உள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்று உள்ளவர்கள் யாராவது அவற்றை தொட்டு இருந்தால், அதன்மூலம் பிறருக்கும் பரவிவிடும் அபாயம் உள்ளது. இது கொரோனா தடுப்பு பணியை கேள்விக்குறியாக்கும் பரிதாபம் உள்ளது. இதை தவிர்க்க அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கிருமிநாசினி மருந்து வைக்க வேண்டும். அவ்வாறு கிருமிநாசினி மருந்து இல்லாத ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும் என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

Next Story