சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி
சொந்த ஊர் செல்ல சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர்,
ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் தங்கி கட்டிடவேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவரும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், வேலை இல்லாமல் உணவுக்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர். தற்போது வடமாநில தொழிலாளர்களை ரெயில், பஸ்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மீஞ்சூர் காட்டுப்பள்ளி பகுதியில் தங்கி சுற்றுவட்டார பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலை இழந்து கஷ்டப்பட்டு வந்த நிலையில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று காலை எண்ணூர் முகத்துவாரம் மேம்பாலம் வழியாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி மூட்டை முடிச்சுகளுடன் கும்பலாக நடந்து சென்றனர்.
எண்ணூர் அருகே வந்தபோது அவர்களை மடக்கிப்பிடித்த எண்ணூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் இதுபோல் அனுமதியின்றி சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி கும்பலாக நடந்து செல்லக்கூடாது என்று கூறி தடுத்தனர். ஆனால் அதனை மறுத்த வடமாநில தொழிலாளர்கள் போலீசாரை சூழ்ந்துகொண்டு கோஷமிட்டனர்.
இதையடுத்து சமூக விலகலை கடைப்பிடிக்க வலியுறுத்தி அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் மீண்டும் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்புகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story