ஆத்தூர் அருகே பயங்கரம்: தொழிலாளி சரமாரி குத்திக்கொலை - 2 பேருக்கு கத்திக்குத்து; 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

ஆத்தூர் அருகே கட்டிட தொழிலாளி கத்தியால் சரமாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 12 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணி ரவுண்டானா அருகில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் திருமணி. இவருடைய மகன் சுயம்புதுரை என்ற சேர்மதுரை (வயது 26). இவருடைய தம்பி ராஜதுரை (24). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுடைய நண்பர் ஆத்தூர் சேனையர் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்து செல்வகுமார். இவர்கள் முக்காணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கனகராஜிடம் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முக்காணி அம்பேத்கர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன், அவருடைய மகன் முத்து லட்சுமணன், அதே பகுதியை சேர்ந்த இளங்கோ, பிரசன்னா, புல்லாவெளியை சேர்ந்த முருகன் மகன் அதிபன், முக்காணியை சேர்ந்த மூக்கன் மகன் சுபாஷ் உள்பட 9 பேர் காந்திநகர் பகுதிக்கு பன்றி பிடிக்க வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த காண்டிராக்டர் கனகராஜ் அம்பேத்கர் நகர் பகுதிக்கு சென்று, பெண்ணை அவதூறாக பேசியவர்களை கண்டித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் மாலையில் வேலை முடிந்ததும் ராஜதுரை, சுயம்புதுரை, முத்து செல்வகுமார் உள்ளிட்டோர் சம்பளம் வாங்குவதற்காக கனகராஜின் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் மோட்டார் சைக்கிள்களிலும், நடந்தும் வந்தனர். அவர்கள் கனகராஜிடம் தகராறு செய்தனர். மேலும், அவரை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த ராஜதுரை உள்ளிட்டவர்கள் தடுக்க முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜதுரை, சேர்மதுரை, முத்து செல்வகுமார் ஆகிய 3 பேருக்கும் சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அந்த 12 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
பரிதாப சாவு
இதையடுத்து கத்திக்குத்து காயம் அடைந்த 3 பேரையும் ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே ராஜதுரை பரிதாபமாக இறந்தார். சேர்மதுரை, முத்து செல்வகுமார் ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
12 பேருக்கு வலைவீச்சு
மோப்ப நாய்கள் டோக்கோ, ஸ்னோ, ஜியா ஆகியவை தூத்துக்குடியில் இருந்து கொண்டு வரப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. அவை சம்பவ இடத்தில் இருந்து காட்டுப்பகுதி வழியாக ஓடி, தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏறி தூத்துக்குடி சாலைக்கு சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக, ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், முத்துலட்சுமணன், இளங்கோ, பிரசன்னா, அதிபன், சுபாஷ் மற்றும் கார்த்திக், ஆத்தி, சூர்யா ஆகியோர் உள்பட 12 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கட்டிட தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story