புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 18 May 2020 8:04 AM IST (Updated: 18 May 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

உம்பன் புயல் காரணமாக புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் புயலாக உருவாகி இருக்கிறது. ‘உம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிரம் அடைந்து இன்று (திங்கட்கிழமை) வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு மேல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடல் சீற்றம்

இந்த புயலினால் தமிழகம் மற்றும் புதுவையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உம்பன் புயல் எதிரொலியாக புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

படகு கவிழ்ந்தது

வீராம்பட்டினம் பகுதியில் கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு திரும்பிய சிறிய அளவிலான படகுகள், கடல் அலை சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் மீன்களும், வலைகளும் கடலில் மூழ்கின. அவற்றை மீனவர்கள் மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங் களுக்கு கொண்டு சென்று நிறுத்தினர்.


Next Story