மாநில எல்லைகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரம்


மாநில எல்லைகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 19 May 2020 4:46 AM IST (Updated: 19 May 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இ-பாஸ் இல்லாதவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.

பாகூர், 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தற்போது 4-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து தரப்பு மக்களும் சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் புதுவை மாநில எல்லைப் பகுதிகளான கோரிமேடு, முள்ளோடை, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் இருந்து மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இ-பாஸ் பெற்றவர்கள் மட்டுமே புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் மாநில எல்லைகளில் போலீசாருடன், மருத்துவக்குழுவினர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு வருவோரின் உடல் வெப்ப நிலையை நவீன கருவி மூலமாக பரிசோதனை செய்தபின்னரே அனுமதிக்கிறார்கள். அவர்களின் பெயர், வாகன எண் உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. 

மேலும் சிலருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுவைக்குள் போலீசார் அனுமதிப்பதில்லை. அதன்படி கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் இருந்த காரணத்தால் புதுவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story