நெகமத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு நடந்து செல்ல முயன்ற தொழிலாளர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர்


நெகமத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு நடந்து செல்ல முயன்ற தொழிலாளர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 20 May 2020 6:44 AM IST (Updated: 20 May 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

நெகமத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு நடந்து செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

நெகமம்,

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள் செயல்படவில்லை. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் இருந்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நெகமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து நடந்து சென்றனர். இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து, அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

பின்னர் தொழிலாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் கூறும்போது, ஊரடங்கு காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கிடையாது. ஒவ்வொரு மாநில தொழிலாளர்களாக சொந்த ஊருக்கு ரெயில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். உங்களுக்கும் ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் திரும்பி நிறுவனத்துக்கு சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், நிறுவனத்தில் வேலை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், அதனால் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story