தொட்டியம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் சாவு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு திரும்பியபோது பரிதாபம்


தொட்டியம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் சாவு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 22 May 2020 4:04 AM GMT (Updated: 22 May 2020 4:04 AM GMT)

தொட்டியம் அருகே, கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு திரும்பியபோது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் இறந்தார்.

தொட்டியம்,

தொட்டியம் அருகே, கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு திரும்பியபோது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் இறந்தார்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வருவாய் ஆய்வாளர்

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவர் தொட்டியம் வருவாய் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் சேகர் தொட்டியம் அருகே உள்ள அலகரை, கல்லுப்பட்டி பகுதியில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு தொட்டியம் தாலுகா அலுவலகம் நோக்கி தனது ஸ்கூட்டரில் திருச்சி-நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அவர் வரதராஜபுரம் பிரிவு ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த வாகனம் ஒன்று அவரது ஸ்கூட்டரில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சேகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபிறகு சேகர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

கலெக்டர்-அதிகாரிகள் அஞ்சலி

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சிவராசு அரசு மருத்துவமனைக்கு சென்று சேகரின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார். சேகரின் உடலுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சேகர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

போலீசார் திணறல்

தொட்டியம் பகுதியில் போலீஸ் நிலையம் சார்பிலும், தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் வருவாய் ஆய்வாளர் மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

திருட்டு மற்றும் இதுபோன்ற விபத்து சமயங்களில் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் தரமில்லாததாகவும், சரியான இடத்தில் பொருத்தப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் அந்த குறைகளை சரிசெய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story