கோபி பகுதியில் ஊரடங்கால் வத்தல், வடகம் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கம்

கோபி பகுதியில் ஊரடங்கால் வத்தல், வடகம் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம்,
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு உணவுடன் கூடுதலாக வத்தல், வடகம் வைப்பார்கள். இதற்காக கோபி பகுதியில் அதிக இடங்களில் வத்தல், வடகம் தயாரிக்கும் தொழில் படுஜோராக நடந்து வந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் இந்த தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வத்தல், வடகம் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் குடிசைத்தொழில் ஆகும். பச்சரிசி, வத்தல், மூலம் வடகம் தயாரிக்கிறோம். மேலும் மோர் மிளகாய், வத்தல், சுண்டவத்தல், அரிசி வத்தல், தக்காளி வத்தல், மற்றும் பூண்டு, வெங்காயம், சீரகம் உள்பட 20-க்கும் மேற்பட்ட வத்தல் வடகங்களை தயாரித்து வருகிறோம்.
பொதுவாக பச்சரிசியை ஊறப்போட்டு மாவு அரைத்து வடகம் வத்தல்களை தயாரிக்கிறோம். இவற்றினை சூரிய ஒளியில் காய வைக்கவேண்டும். பின்னர் காய வைத்த வத்தல்களை பாக்கெட் செய்து அதை விற்பனை செய்து வருகிறோம்.
குறிப்பாக கோபி, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வந்தோம். ஆனால் இப்போது ஊரடங்கால் கடந்த 2-மாதங்களாக இதை தயாரிக்கவும் முடியவில்லை. மேலும் தயாரித்ததை விற்க முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எங்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story