கொரோனா பரவுதலை தடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஊரடங்கில் தளர்வு
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனை அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுய ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை இயன்ற அளவு தவிர்க்க வேண்டும். காற்றின் மூலமாகவும், கண்ணுக்கு தெரியாத வகையிலும் பரவுகின்ற கொரோனா வைரசில் இருந்து நம்மை காத்து கொள்வது மிகவும் அவசியமானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 105 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றொருவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 91 பேர் மராட்டிய மாநிலம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று வழங்குகிறோம்.
தீவிர கண்காணிப்பு
கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அங்கு போலீசாருடன் சுகாதார துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வெளிமாவட்டங்களில் கொரோனா பரிசோதனை செய்து, அனுமதிச்சீட்டு பெற்று வந்தவர்களுக்கும், மாவட்ட எல்லைகளில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் பின்னரே அவர்களை மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குடிமராமத்து பணிகள்
கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டதால், தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 14 பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தி.மு.க. எம்.பி.யாக உள்ள ஆர்.எஸ்.பாரதி வக்கீலாகவும் உள்ளார். பொது வாழ்வில் இருப்பவர்கள் சாதி, மதம் பற்றி வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இது நாட்டு மக்களுக்கு தெரியும். ஆர்.எஸ்.பாரதி மீது போலீசார் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை திசை திருப்புவதற்காக அவர், அரசை குறை கூறுகிறார்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Related Tags :
Next Story