ஹலகூர் அருகே எளிமையாக நடந்த உடற்கல்வி ஆசிரியர் திருமணம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


ஹலகூர் அருகே எளிமையாக நடந்த உடற்கல்வி ஆசிரியர் திருமணம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 24 May 2020 10:15 PM GMT (Updated: 24 May 2020 7:28 PM GMT)

ஹலகூர் அருகே எளிமையான முறையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரின் திருமணம் நடந்தது.

ஹலகூர்,

ஹலகூர் அருகே எளிமையான முறையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரின் திருமணம் நடந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே பேடரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தன். இவர் சிக்பள்ளாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுக்கும் மே 24-ந் தேதி அதாவது நேற்று திருமணம் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தன் - ரஞ்சிதா திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இவர்களது திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த இருவரது பெற்றோரும் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதியும் பெற்றனர். அதன்பேரில் இவர்களது திருமணம் நேற்று ரஞ்சிதாவின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடந்தது. இவர்களது திருமணத்தில் இருவரது பெற்றோர்கள் உள்பட 50-க்கும் குறைவான நபர்களே கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தோருக்கு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுமண தம்பதி முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர் திரவ பாட்டில்களை வினியோகம் செய்தனர்.

இதை திருமணத்தில் கலந்து கொண்ட சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோக்கள் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.


Next Story