தாராபுரத்தில் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி


தாராபுரத்தில்  அழகு நிலையங்கள் திறக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 25 May 2020 11:22 AM IST (Updated: 25 May 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் அழகு நிலையங்களை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தாராபுரத்தில் உள்ள அழகு நிலையங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தாராபுரம், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் பெண்கள் அழகு நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் அழகுநிலையம் வைத்து நடத்துபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதுபோன்று பெண்கள், ஐ புரூவ், சிகை அலங்காரம், மற்றும் பெண் குழந்தைகளுக்கு முடிவெட்ட வழியின்றி தவித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் (சென்னை தவிர) அனைத்து பகுதிகளிலும் உள்ள அழகு நிலையங்களை திறக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தாராபுரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக அழகு நிலையங்கள் பூட்டப்பட்டு இருந்ததால் அங்குள்ள அறைகளை ஊழியர்கள் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த பெண்கள் ஆர்வத்துடன் சிகை அலங்காரம் செய்து சென்றனர்.

இது குறித்து அழகு நிலைய உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

அழகுப்படுத்தினர்

கடந்த 2 மாதங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகை அலங்காரம் செய்து கொள்ள முடியாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அழகு நிலையம் திறந்து இருப்பதால் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வந்து சிகை அலங்காரம், முகம் அழகுபடுத்துதல், குழந்தைகளுக்கு முடிவெட்டுதல் போன்றவற்றை செய்து செல்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில் திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக நடத்த தடை விதிக்கப்பட்டதால் மணமகள் உள்பட யாரும் தங்களை அழகு படுத்திக்கொள்ள விரும்பவில்லை. தனியார் நிறுவனங்கள் விடுமுறை காரணமாகவும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளாமல் வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அழகுநிலையம் திறந்து இருப்பதால் இளம்பெண்கள், திருமண மாணவர்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து தங்களை அழகுபடுத்தி செல்கின்றனர். இதனால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசுக்கு நன்றி

நாங்கள் வேலை செய்யும்போது முக கவசம், கையுறை அணிந்துகொள்கிறோம். வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியை கடைபிடித்து அழகு நிலையத்துக்குள் வர அனுமதிக்கிறோம். மேலும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அலங்காரம் செய்து விடுகிறோம்.

அழகு நிலையங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story