இலவச மின்சாரம் ரத்து அறிவிப்பை கண்டித்து குமரியில் 205 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


இலவச மின்சாரம் ரத்து அறிவிப்பை கண்டித்து குமரியில் 205 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 May 2020 7:43 AM IST (Updated: 27 May 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

இலவச மின்சாரம் ரத்து அறிவிப்பை கண்டித்து குமரி மாவட்டத்தில் 205 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில், 

இலவச மின்சாரம் ரத்து அறிவிப்பை கண்டித்து குமரி மாவட்டத்தில் 205 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

விவசாயத்துக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்கின்ற நடவடிக்கையை கண்டித்தும், தொடர்ந்து விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் விஜயதரணி எம்.எல்.ஏ., மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகேசன், பாடகர் முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர் அன்னசுகிர்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் குழித்துறையில் உள்ள கனரா வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திலும், தபால் நிலைய சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் விஜயதரணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இதில் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் பால்மணி, குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குளச்சல் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்க, குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திங்கள் சந்தை பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கருங்கலில் தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோபின் சிறில், வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் குமாரவேல் மணி, ஜேக்கப், செலின்ராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராபர்ட் புரூஸ்

நாகர்கோவில் கட்டையன்விளையில் உள்ள குமரி மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட முன்னாள் தலைவரும், காங்கிரஸ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான ராபர்ட் புரூஸ் தலைமை தாங்கினார்.

இதில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் திருத்துவதாஸ், நடேசன், மாதவன்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள தபால் நிலையம் முன்பும் ராபர்ட்புரூஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞர் காங்கிரசார்

இதேபோல இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நவீன்குமார் தலைமையில் சிவபிரபு, ஜோ உள்ளிட்டோர் மறவன்குடியிருப்பு தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு 5 பேருக்கு மேலாக அதாவது 15 பேர் கூடிநின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் பிடித்து போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் அனைவரையும் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சுமார் 10 நிமிடங்களுக்குப்பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பி.எஸ்.என்.எல். அலுவலகம்

இதேபோல் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தாரகைகத்பட் தலைமையிலும், வடசேரி ஸ்டேட் வங்கி கிளை முன்பு அய்யப்பன் தலைமையிலும், டிஸ்டில்லரி ரோடு மின்வாரிய அலவலகம் முன்பு மாநகர தலைவர் அலெக்ஸ் தலைமையிலும், கோட்டார் கனரா வங்கி முன்பு வாகிது, மகாலிங்கம் ஆகியோர் தலைமையிலும், வல்லன்குமாரவிளை மின்வாரிய அலுவலகம் முன்பு டைசன், விஜயராஜா தலைமையிலும், கோணம் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு முன்னாள் கவுன்சிலர் சேவியர், அனுசாபிரைட் ஆகியோர் தலைமையிலும் என மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது பங்கேற்றவர்கள் காங்கிரஸ் கட்சிக் கொடிகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்புக் கொடியையும் கைகளில் பிடித்திருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆரல்வாய்மொழி

கொட்டாரம் மின் வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வக்கீல் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆரல்வாய்மொழி தபால் நிலையம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தோவாளை கிழக்கு வட்டார தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் நேசமணி, டேவிட்சிங், நீலாமணி, கனகப்பன் உள்பட 7 பேர் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் செய்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பூதப்பாண்டி தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதேபோல் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், ஞாலம், அருமநல்லூர், தடிக்காரன்கோணம், காட்டுப்புதூர், தெள்ளாந்தி, திடல், அழகியபாண்டியபுரம் ஆகிய 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க தோவாளை வட்டார தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ரவிக்குமார், பூதப்பாண்டி பேரூர் தலைவர் கலீல்ரகுமான், தியாகி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சுகிராமம் அருகே உள்ள வாரியூர் தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார துணைத்தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார், அஞ்சுகிராமம் நகர தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் தேவசகாயசிங், செயலாளர் தனசிங், நகர வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

205 இடங்களில் நடந்தது

குமரி மாவட்டம் முழுவதும் 205 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆரல்வாய்மொழியில் 7 பேரும், திருவட்டாரில் 8 பேரும் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் போலீசார் கூறினர்.

Next Story