சென்னையில் இருந்து எட்டயபுரம் வந்த மணப்பெண்ணுக்கு கொரோனா; திருமணம் தள்ளிவைப்பு


சென்னையில் இருந்து எட்டயபுரம் வந்த மணப்பெண்ணுக்கு கொரோனா; திருமணம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 28 May 2020 5:30 AM IST (Updated: 28 May 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து எட்டயபுரம் வந்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

எட்டயபுரம்,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணுக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த 26 வயதான வாலிபருக்கும் வருகிற 7-ந்தேதி எட்டயபுரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மணப்பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தனர்.

அவர்கள், தூத்துக்குடி மாவட்ட எல்லையான எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை சோதனைச்சாவடியில் வந்தபோது, மணப்பெண் உள்ளிட்ட 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மணப்பெண்ணுக்கு கொரோனா

பின்னர் அவர்கள் 5 பேரையும் எட்டயபுரம் இல்லத்து பிள்ளைமார் தெருவில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் தனிமைப்படுத்தினர். இதற்கிடையே, மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மணப்பெண்ணின் குடும்பத்தினரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். இதையடுத்து வருகிற 7-ந்தேதி நடைபெற இருந்த திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுகாதார பணிகள் தீவிரம்

தொடர்ந்து எட்டயபுரம் இல்லத்து பிள்ளைமார் தெருவில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கணேசன் தலைமையில், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அங்கு அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது.

அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story