காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை


காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2020 12:44 AM GMT (Updated: 1 Jun 2020 12:44 AM GMT)

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க நேற்று மக்கள் சாரை சாரையாக குவிந்தனர். கொரோனா வீரியம் புரியாதது போல சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர்.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்யவேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை இன்னும் அளிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதை மெய்ப்பிக்கும் விதமாகவே பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. கும்பலாக சுத்துவது, கடைகளில் கூட்ட நெரிசல், முக கவசம் அணியாமல் நடமாட்டம், தண்ணீர் லாரிகளை சூழ்ந்து குடிநீர் பிடிக்க முண்டியடிப்பது என இவை அனைத்துமே தினசரி காணும் காட்சிகளாக மாறி வருகிறது. தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது என்பதற்காக மக்கள் அலட்சியம் காட்டி வருவதையே கண்கூடாக பார்க்க முடிகிறது.

சென்னை காசிமேட்டில் எப்போதுமே மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருவிழா கூட்டம் போல மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் அருகேயுள்ள சர்வீஸ் சாலையோரம் மீன்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காசிமேடு சர்வீஸ் சாலையில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். நடந்து வந்தும், இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சாரை சாரையாக மீன்கள் வாங்க வந்தனர். மீன் ஏதோ கிடைக்காத பொருள் போல போட்டிப்போட்டு கொண்டு வியாபாரிகளிடம் இருந்து மீன்கள் வாங்கி சென்றனர். கொரோனா வீரியம் புரியாமல் சமூக இடைவெளியை மறந்து விரும்பிய மீன்களை வாங்க மக்கள் திரண்டனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் பலர் முக கவசம் அணியாதது தான்.

அவ்வப்போது போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வந்தாலும் மக்கள் அதை கண்டுகொள்ளவில்லை. தடுப்பு கம்புகள், வட்டங்கள் வரைதல் என எத்தனையோ முயற்சிகளை எடுத்தாலும், நேற்று மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு விட்டனர் என்றே சொல்லலாம். அந்தளவு சமூக இடைவெளியை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனாலும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே நடமாடி கொண்டிருந்தனர். இதையெல்லாம் பார்க்கும்போது, ‘உண்மையிலேயே இவர்களுக்கு கொரோனா வீரியம் புரியவில்லையா? அல்லது கொரோனா நம்மை ஒன்றும் செய்யாது என்ற அசட்டு தைரியமா? என்றே எண்ண தோன்றுகின்றது‘, என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேபோல வானகரம் மீன் மார்க்கெட் சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. இறைச்சி கடைகளில் கூட தற்போது ஓரளவு கூட்டத்தை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வியாபாரிகள் போராடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் மீன் மார்க்கெட்களில் உள்ள கூட்டத்தை பார்க்கும்போது அரசின் அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் விழலுக்கு இறைத்த நீராக போய்விடுமோ... என்ற அச்சம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

Next Story