முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு இதய பிரச்சினை தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததால் உயிரிழந்ததாக புகார்


முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு இதய பிரச்சினை தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததால் உயிரிழந்ததாக புகார்
x
தினத்தந்தி 1 Jun 2020 11:31 PM GMT (Updated: 1 Jun 2020 11:31 PM GMT)

முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு இதய பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததால் குழந்தை உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு இதய பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததால் குழந்தை உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் தாமதம்

முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி மாலதி(வயது30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவவலி ஏற்பட்டதால் கடந்த 28-ந்தேதி பிரசவத்திற்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில் குழந்தைக்கு இதயதுடிப்பு சரியாக இயங்கவில்லை. அதனால் மேல்சிகிச்சைக்காக குழந்தையை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு தகவல் தெரிவிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் அதிகாலை 4 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் ஆம்புலன்சில் 5.30 மணிக்கு திருவாரூருக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ குழுவினர் சேர்த்தனர்.

கலெக்டருக்கு மனு

இந்தநிலையில் 29-ந்தேதி மதியம் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது குழந்தையின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் குழந்தை இறந்ததாக டாக்டரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் மீனாட்சிசுந்தரம் குடும்பத்தினர் குழந்தை இறப்புக்கு காரணமான 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மற்றும் மருத்துவ குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர். மீனாட்சிசுந்தரம் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் 2-வதாக ஆண்குழந்தை பிறந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் கூறுகையில், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை குளறுபடி மற்றும் 108ஆம்புலன்ஸ் தாமதம் காரணமாக பல சிசு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது எனது குடும்பமும் ஆண் குழந்தையை இழந்துவிட்டது. இனி இதுபோன்ற இழப்புகள் ஏற்படாத வகையில் அதிகாரிகளின் நடவடிக்கை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Next Story