வேளாண் அறிவியல் நிலையத்துக்கு மணக்குள விநாயகர் கோவில் யானையை கொண்டு செல்ல எதிர்ப்பு


வேளாண் அறிவியல் நிலையத்துக்கு மணக்குள விநாயகர் கோவில் யானையை கொண்டு செல்ல எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Jun 2020 4:04 AM IST (Updated: 6 Jun 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் அறிவியல் நிலையத்துக்கு மணக்குள விநாயகர் கோவில் யானையை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக லட்சுமி என்ற யானை உள்ளது. இந்த யானை சமீபத்தில் கோவை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு சென்று வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மணக்குள விநாயகர் கோவில் பூட்டப்பட்டதால் வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி பராமரிக்கப்பட்டு வந்தது. நாள்தோறும் யானைக்கு நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவில் யானையை மேட்டுப்பாளையம் குரும்பாபேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் வைத்து 15 நாட்கள் பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. அதன்படி யானையை நேற்று மாலை அங்கு அழைத்துச் செல்வதாக இருந்தது. பாகன்களும் தயார் நிலையில் இருந்தனர்.

இந்த தகவல் பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணியினருக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் கோவில் யானை பராமரிக்கப்பட்டு வரும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அங்கு யானை கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து மணக்குள விநாயகர் கோவில் யானையை வேளாண் அறிவியல் நிலையத்துக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரியகடை போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதையடுத்து யானை வேளாண் அறிவியல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை.

Next Story