குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி நண்பர் படுகாயம்

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
குளித்தலை,
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
வாலிபர் பலி
கரூர் மாவட்டம், குளித்தலை கீழாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மலையாளன். இவரது மகன் சக்திவேல் (வயது 28). இவரும், தோகைமலை அருகே உள்ள வாழைக்கிணம் பகுதியை சேர்ந்த பாலமுருகனும் (27) தச்சு வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சக்திவேல், மோட்டார் சைக்கிளில் நண்பர் பாலமுருகனை அழைத்துக்கொண்டு, குளித்தலை வைப்புதூரில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றார்.
அங்கு மனைவியை பார்த்து விட்டு, சக்திவேல் மீண்டும் மோட்டார் சைக்கிளில் பாலமுருகனுடன் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். குளித்தலை-மணப்பாறை சாலையில், இரும்பூதிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். சிறிது நேரத்தில் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு, சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story