திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் போலி ஆர்.சி.புத்தகம் தயாரித்து கொடுத்த 3 பேர் கைது

திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், போலி ஆர்.சி. புத்தகம் தயாரித்து கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவாக்குடி,
திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், போலி ஆர்.சி. புத்தகம் தயாரித்து கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி ஆர்.சி. புத்தகம்
திருச்சி நவல்பட்டு காவிரி நகர் பகுதியில் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த சுந்தர்ராமன் (வயது 45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்த அமலன்அன்பு செல்வன் (29), புதுக்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (21) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில், சமீபத்தில் 2 பழைய கார்களுக்கு ஆர்.சி. புத்தகம் தயார் செய்து கொடுத்ததாக மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் பணி இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
தான், எதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டோம் என்று சுந்தர்ராமனுக்கு புரியவில்லை. அதற்கான காரணத்தை கண்டறிய அலுவலகத்திற்கு வந்த அவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்த 3 பேரும் அலுவலகத்தில் உள்ள கோப்புகளில் ஒரு சில பக்கங்களை கிழித்து எடுத்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
3 பேர் கைது
இதேபோல, மார்ச் மாதம் 24-ந் தேதி பாலசுப்பிரமணியன் சில கோப்புகளை எடுத்து வந்து அமலன் அன்புசெல்வனிடம் கொடுப்பதும் அவற்றை வாங்கிய அவர், அதிலிருந்து சில பேப்பர்களை கிழித்து செல்வதும் தெரிய வந்தது. மார்ச் 26-ந் தேதி சுந்தரமூர்த்தி, ஒரு ஆவணத்தை கொண்டு வந்து அமலன் அன்புசெல்வனிடம் கொடுக்கிறார். அந்த ஆவணத்திலிருந்து அமலன் அன்புசெல்வன் சில பேப்பர்களை கிழித்து எடுத்து செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் அவர்கள் 2 பழைய கார்களுக்கு ஆர்.சி. புத்தகம் போலியாக தயார் செய்து கொடுத்துள்ளனர்.
அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், நடந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சுந்தர்ராமன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதேபோல, அவர்கள் பல பேருக்கு ஆர்.சி.புத்தகம் தயாரித்து கொடுத்தார்களா?, இதன்மூலம், அவர்கள் பெற்ற ஆதாயம் எவ்வளவு என்று போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தால் அவரது பணி இடைநீக்கம் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story