திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா: சீர்காழி போலீஸ் நிலையம் மூடப்பட்டது


திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா: சீர்காழி போலீஸ் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 8 Jun 2020 9:46 AM IST (Updated: 8 Jun 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதின் எதிரொலியாக சீர்காழி போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

சீர்காழி,

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. சீர்காழி, ஆனைக்காரன் சத்திரம், புதுப்பட்டினம், திருவெண்காடு, பூம்புகார், பொறையாறு உள்ளிட்ட போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வரதட்சணை மற்றும் பெண்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவெண்காடு போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

நேற்றுமுன்தினம் திருவெண்காடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெண் ஒருவரை வழக்கு தொடர்பாக திருவெண்காடு போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் அவரை சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது திருவெண்காடு போலீசாரும் விசாரிப்பதற்காக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த மகளிர் போலீசார் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை நேற்று மூடினர். இதேபோல் அருகில் உள்ள சீர்காழி போலீஸ் நிலையத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு முக்கிய வழக்கில் மட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story