நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது


நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 9 Jun 2020 11:39 PM GMT (Updated: 9 Jun 2020 11:39 PM GMT)

நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது.

கொரோனா நிவாரணம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 என ரூ.12 ஆயிரத்து 500-ஐ வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.400 வழங்க வேண்டும்.

ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும். வழக்கமாக வழங்கும் அரிசியின் அளவை குறைக்க கூடாது. கூட்டுறவு மற்றும் தேசிய வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழங்கி உள்ள குழு மற்றும் தனிநபர் கடன்களை 6 மாதங்களுக்கு வசூலிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழையூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜன், சுப்பிரமணியன், கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேடு

இதேபோல் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் கடைத்தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் நாராயணன், ஊராட்சி தலைவர் முருகானந்தம், கிளை செயலாளர் பாலகுரு, ஊராட்சி துணை தலைவர் வினோத், நிர்வாகிகள் வீரப்பன், கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

நாகை

நாகை அவுரிதிடலில் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மணி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பேசினர்.

திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிக்கல் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர்கள் ராயர், கோவிந்தசாமி, மணி, விஜய், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். செம்பனார்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டக்குழு உறுப்பினர் மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொள்ளிடம் அருகே புத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் சிவராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் கஜேந்திரன், கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். சீர்காழியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வீரராஜ், ஒன்றிய பொருளாளர் சுந்தரையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட குழு உறுப்பினர் நாகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Next Story