இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தி ஒற்றை காலில் நின்று போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தி ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்தினர்.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பொதுமக்கள் கூடாமல் இருக்கும் வகையில் கோவில்கள் மூடப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 17 கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோவில்களை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் முன்பு நீலகிரி மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் ஒற்றை காலில் நின்று போராட்டம் நடந்தது.
கோஷங்கள்
மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பாறை முனீஸ்வரர் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கோவை கோட்ட செயலாளர் மஞ்சுநாத், துணைத்தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் முன்பு ஊட்டி மேற்கு நகர தலைவர் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், டானிங்டன் விநாயகர் கோவில், கருமாரியம்மன் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி ஜெகன் தலைமை தாங்கினார். கோத்தகிரி பொறுப்பாளர்கள் ரமேஷ், கனகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
100-க்கும் மேற்பட்ட கோவில்கள்
கூடலூர் சக்தி விநாயகர் கோவில், மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவில், நந்தட்டி மாதேஷ்வரன் கோவில், சளிவயல் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் முன்பு ஒற்றை காலில் நின்று கொண்டு இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர செயலாளர் பிரஜோத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன் பேசினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளர் கிருஷ்ண தாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று குன்னூர், மஞ்சூர், பந்தலூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story