வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.9 கோடி மோசடி புகார் 3 பேர் கைது


வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தில்   போலி ஆவணங்கள் மூலம் ரூ.9 கோடி மோசடி புகார்   3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2020 7:00 AM IST (Updated: 12 Jun 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.9 கோடி மோசடி செய்த புகார் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகரில் உள்ள மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ருத்ரசேகர் மகன் சதீஷ்குமார் (வயது 32). இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் நகரில் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 144 வீடுகள் இருந்தன. இந்த பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு அப்பகுதி குழந்தைகளின் கல்விக்காக கடந்த 1988-ம் ஆண்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர் நலச்சங்க மெட்ரிக் பள்ளி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சங்கத்தில் பல ஆண்டுகளாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படாமலேயே இருந்து வந்தது.

இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி சங்க உறுப்பினர்கள் மற்றும் இறந்தவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு சங்க நிர்வாகிகள் பொதுக்குழு நடைபெற்றதாக போலி ஆவணம் தயாரித்துள்ளனர். குறிப்பாக எனது தந்தை கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்துவிட்ட நிலையில் அவர் மேற்கண்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாக கையெழுத்தையும் போலியாக போட்டு தங்களுக்கு வேண்டிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

இந்த போலியான தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு மெட்ரிக் பள்ளியை தன்னிச்சையாக அறக்கட்டளையாக மாற்றி பதிவு செய்து அதன் வங்கி கணக்கில் இருந்து சங்கத்திற்கு சொந்தமான ரூ.9 கோடியை நிர்வாகிகள் பலமுறை எடுத்து மோசடி செய்துள்ளனர். எனவே இந்த மோசடியில் சங்க தலைவர் உள்பட 15 நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து கையாடல் செய்த ரூ.9 கோடியை மீட்டு சங்க கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்களான கிருஷ்ணன்(வயது 69), வேலு(67), வளையாபதி(62) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த மோசடி புகார் தொடர்பாக சங்க தலைவர் சண்முகராஜன், பொறுப்பாளர்கள் சந்திரன், குருசாமி, கிருஷ்ணன் உள்பட 12 பேரை போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபுரத்தில் பழமையான வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தில் நடந்துள்ள இந்த மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story