மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொரோனாவின் அடுத்த குறி மீன், இறைச்சி கடைகளாக இருக்கலாம் மக்கள் உஷார் ஆவார்களா...?


மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொரோனாவின் அடுத்த குறி மீன், இறைச்சி கடைகளாக இருக்கலாம் மக்கள் உஷார் ஆவார்களா...?
x
தினத்தந்தி 15 Jun 2020 4:15 AM IST (Updated: 15 Jun 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவின் அடுத்த குறி மீன், இறைச்சி கடைகளாக இருக்கலாம் எனவும், இதனால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.

மதுரை, 

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

தமிழகத்திலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் சென்னையில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் இருந்ததைவிட தினமும் 20 முதல் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பது வேதனை தரும் விஷயமாகும். இதுபற்றி மக்களுக்கு தெரிந்தாலும், அதை பொருட்டாக கருதாமல் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர்.

மதுரையில் கூட கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 400-ஐ கடந்து 500-ஐ நோக்கி செல்கிறது. வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தினாலும் அரசின் இந்த அறிவிப்பை பலர் காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை. இதனால் பாதிப்பு என்னவோ மக்களுக்குதான்.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மதுரையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பெட்டிக் கடை முதல் பெரிய கடைகள் வரை திறக்கப்பட்டுள்ளன. கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று பொருட்கள் வாங்க வேண்டும் என வியாபாரிகள் அறிவுறுத்தினாலும் அதையும் அலட்சியம் செய்பவர்களையும் காண முடிகிறது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வந்தால் போதும், மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதன்படி நேற்று மதுரையில் உள்ள பெரும்பாலான இறைச்சி, மீன் கடைகளிலும் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சிகளைக் காண முடிந்தது. இறைச்சி வாங்குகிறார்களோ இல்லையோ, கொரோனாவை வாங்கிவிட்டு சென்று விடுவார்களோ என்ற அச்சம், அந்த கடைகளை கடந்து செல்லும் அனைவருக்கும் இருக்கிறது. இதே நிலைதான் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகரங்களிலும் நிலவுகிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையிலும் வரும் காலங்களில் கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு இல்லாததே முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டியது இருந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கடைக்கு செல்லலாம். ஆனால் அவர்களோ எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் கடைகளுக்கு சென்று வருகின்றனர். அதிலும் சிறு குழந்தைகளுடனும் கடைகளுக்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் பல்வேறு வகைகளில் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 7 நாள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.

எனக்கு கொரோனா வராது என்று நினைப்பது தவறு. நோய்த்தொற்று என்பது பொதுவானது. இந்த நோயானது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். எனவே நோயிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு வெளியில் வருவோர் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவின் தாக்கம் குறையும். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story