சேலத்தில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்பக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம் - கோத்தகிரி அருகே பரபரப்பு

கோத்தகிரி அருகே சேலத்தில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்பக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அலியூர் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்கு கடந்த மாதம் சென்னை, செங்கல்பட்டுவில் இருந்து 10 பேர் வந்து தங்கினர். மேலும் அதே பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டனர். இதை கண்ட கிராம மக்கள் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களை பங்களாவிலேயே தனிமைப்படுத்தினர். எனினும் கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வந்ததால், அலியூர் கிராமத்தில் பீதி நிலவியது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அதே பங்களாவுக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து 4 பேர் வந்து தங்கினர். இதை அறிந்த கிராம மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சேலத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் அவர்கள் வந்தது தெரியவந்தது. உடனே அவர்களை திருப்பி அனுப்பக்கோரி திடீரென கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேலத்தில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்பாவிட்டால், சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, சேலத்தில் இருந்து வந்தவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story