நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 July 2020 10:00 PM GMT (Updated: 4 July 2020 6:28 PM GMT)

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

61 பேர் பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 921 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருந்தது.

இந்த நிலையில் நேற்று உள்ளூரில் 58 பேர், வெளியூரில் இருந்து வந்தவர்களில் 3 பேர் என மொத்தம் 61 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருந்தது கண்டறியப்பட்டது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரியும் வார்டன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சிறை வளாகம் மற்றும் சிறைக்காவலர் குடியிருப்பில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

982-ஆக உயர்வு

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் 3 பேர், சிவன் கோவில் வடக்கு ரதவீதியில் 2 பேர், மேலப்பாளையம் தாய் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், சி.என்.கிராமத்தில் 2 பேர், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பரவி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதனால் நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 982-ஆக அதிகரித்து உள்ளது. இதில் 635 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

வங்கி உதவி மேலாளர் பலி

அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் ரவிராம் நகரில் வசித்து வந்த 47 வயது வங்கி உதவி மேலாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 30-ந் தேதி நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்து உள்ளது.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு உள்ளூர் பரவலாக 16 பேருக்கும், வெளியூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 408 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 207 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் இறந்து விட்டார். மீதி உள்ள 200 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120-ஆக அதிகரித்து உள்ளது.

பசுவந்தனையில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த ஒரு ஊழியர் உள்பட தூத்துக்குடி மாநகரத்தை சேர்ந்த 15 பேருக்கும், கோவில்பட்டி, காயல்பட்டினம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story