விவசாயி தற்கொலை வழக்கில் வங்கி ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு

விவசாயி தற்கொலை வழக்கில் தனியார் வங்கி ஊழியர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தென்னை மரங்களுக்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார். தாராபுரத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கடந்த 2012-ம் ஆண்டு விவசாய கடன் வாங்கிய ராஜாமணி, வறட்சி மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்ததாகவும், இந்த நிலையில் வங்கி கடன் வசூல் செய்யும் ஊழியர்கள் விவசாயியின் வீட்டிற்கே சென்று தொடர்ந்து மிரட்டியும் அவமரியாதை செய்தும் வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அப்பகுதி சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
3 பேர் மீது வழக்கு
இதையடுத்து குண்டடம் போலீசார் விவசாயி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனியார் வங்கி ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும் போது, விவசாயியை மிரட்டிய வங்கி ஊழியர்கள் யார் என்பதை விவசாயியின் குடும்பத்தினர் நேரில் அடையாளம் காண்பிப்பதாக தெரிவித்ததன் பேரில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story