நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் போலீஸ் விசாரணை


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 July 2020 4:00 AM IST (Updated: 7 July 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை நடத்தினர்.

மும்பை, 

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை நடத்தினர்.

சுஷாந்த் சிங் தற்கொலை

எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தில் நடித்ததால் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங்(வயது34). இவர் கடந்த மாதம் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளர்ந்து வரும் இளம்நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொழில்போட்டி காரணமாக சிலர் சுஷாந்த் சிங்கை பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க விடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பன்சாலியிடம் விசாரணை

போலீசாா் நடிகர் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என 29 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தநிலையில் நேற்று பிரபல இந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சஞ்சய் லீலா பன்சாலி பாந்திரா போலீஸ் நிலையத்துக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு தனது வக்கீல்களுடன் வந்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தாா்.

பின்னர் 3.30 மணியளவில் விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி சுஷாந்த் சிங்கிற்கு அவரது படத்தில் நடிக்க 4 முறை வாய்ப்பு கொடுத்ததாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக அவரது படத்தில் நடிகரால் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

Next Story