கொரோனா பரவலை தடுக்க நெல்லை கலெக்டர் அலுவலக மனு பெட்டி இடமாற்றம்


கொரோனா பரவலை தடுக்க நெல்லை கலெக்டர் அலுவலக மனு பெட்டி இடமாற்றம்
x
தினத்தந்தி 9 July 2020 4:00 AM IST (Updated: 9 July 2020 12:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டது.

நெல்லை, 

கொரோனா பரவலை தடுக்க நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டது.

மனு பெட்டி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். கலெக்டர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அதற்கு தீர்வு காண அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கையொட்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் பொதுமக்கள் திங்கட்கிழமை அதிகளவிலும், மற்ற நாட்கள் ஒருசிலரும் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முறையீடு செய்ய வருகிறார்கள்.

அவ்வாறு வருவோரிடம் மனுக்களை நேரடியாக பெறாமல், மனுக்களை போட்டுச்செல்ல ஒரு மனு பெட்டி வைக்கப்பட்டது. கலெக்டர் அறைக்கு கீழே உள்ள வராண்டாவில் வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் போட்டுச்செல்லும் மனுக்களை மாலையில் அதிகாரிகள் எடுத்து பார்த்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

இடமாற்றம்

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து புகார் பெட்டியை நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வெளிப்புற நுழைவு வாசல் அருகில் வைத்தனர். கோரிக்கை மனு கொண்டு வந்த பொதுமக்கள் அதில் போட்டுவிட்டு உடனுக்குடன் சென்றனர். அதிகமானோர் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்வதை தவிர்க்கும் வகையிலும், பாதுகாப்பு கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story