கர்நாடகத்தில் அடுத்த 30 நாட்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிக்கும் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு அதிர்ச்சி தகவல்

கர்நாடகத்தில் அடுத்த 30 நாட்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அடுத்த 30 நாட்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரசுக்கு 617 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவல் வேகத்தை கண்டு கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே வழி என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகரில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா இதே வேகத்தில் சென்றால், அடுத்த 15 முதல் 30 நாட்களில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மிகப்பெரிய சவால்
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகரில் 14-ந் தேதி (நாளை) இரவு 8 மணி முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த 15 முதல் 30 நாட்களில் 2 மடங்காக அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 மாதம் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதனால் பொதுமக்கள் பீதி அடையவோ அல்லது நம்பிக்கையை இழக்கவோ தேவை இல்லை.
இவ்வாறு ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story