கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்குகிறது: நாளை மறுநாள் புதுவை பட்ஜெட் - முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்


கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்குகிறது: நாளை மறுநாள் புதுவை பட்ஜெட் - முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்
x
தினத்தந்தி 17 July 2020 10:15 PM GMT (Updated: 18 July 2020 12:08 AM GMT)

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்காக (ஏப்ரல், மே, ஜூன்) ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அனுமதி காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததையொட்டி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டது.

இதையடுத்து ரூ.9,500 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டு பட்ஜெட் தொகையை குறைத்து அனுப்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி திருத்தம் செய்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை சீரமைத்து மீண்டும் ஒப்புதலுக்கு அரசு அனுப்பி வைத்தது.

கடந்த ஜூன் மாத இறுதியிலேயே ஒப்புதல் பெற்று இருக்க வேண்டிய நிலையில் அனுமதி கிடைக்காமல் காலதாமதமாகி நீண்ட இழுபறியில் இருந்து வந்தது. இதற்கிடையே பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்து விட்டதாக டெல்லி வட்டாரத்தில் இருந்து புதுவை அரசுக்கு வாய்மொழியாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்ஜெட் குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வராததால் தொடங்கிய உடனேயே கூட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவு வந்தது. அதையடுத்து புதுச்சேரி சட்டசபையை கூட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதையடுத்து பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பான பணியில் அரசு வேகம் காட்டியது. இந்தநிலையில் சட்டசபை செயலாளர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரி சட்டசபை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கவர்னர் கிரண்பெடி உரையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து நண்பகல் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி 2020-2021-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின் மறுநாள் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில் மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. பின்னர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்று சபையின் நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே கவர்னர் உரைக்கு இறுதி வடிவம் கொடுப்பது, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதாலும், தற்போதைய அரசின் இறுதி பட்ஜெட் என்பதாலும் இதில் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள், முக்கிய அறிவிப்புகள் வெளியாக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நீண்ட நாட்கள் நடத்தாமல் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையிலான சட்டமன்ற அலுவல் குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளது.

Next Story