சங்கராபுரம் மணியாற்றில் வெள்ளப்பெருக்கு


சங்கராபுரம் மணியாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 30 July 2020 12:59 AM GMT (Updated: 30 July 2020 12:59 AM GMT)

தொடர் மழையினால் சங்கராபுரம் மணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ளது புதுப்பாலப்பட்டு எட்டியாறு. இந்த பகுதியில் உற்பத்தியாகும் மணியாறு அரசம்பட்டு, பூட்டை, தியாகராஜபுரம், சங்கராபுரம், வடசெட்டியந்தல், கீழப்பட்டு வழியாக சென்று சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் கலக்கிறது. இந்த நிலையில் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் வறண்டு கிடந்த சங்கராபுரம் மணியாற்றில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது.

தொடர்ந்து நேற்றும் ஆற்றில் பாதி அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது. இதன் மூலம் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கும் நீர் வரத்து தொடங்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மணியாற்றின்குறுக்கே சுமார் ரூ.80 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதால் ஆற்றில் வரும் தண்ணீர் பெரும் அளவில் சேமிக்கப்பட்டு குறைந்த அளவு தண்ணீரே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. தற்போது பயிர்சாகுபடி காலம் என்பதால் மணியாற்றில் தண்ணீர் வரத்து விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story